உளுந்தூர்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த நபர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியர் பட்டயப்படிப்பு படித்து வந்தார். அவரும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி வீட்டின் பின்புறம் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதற்கிடையே, ரங்கசாமி தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த ரங்கசாமி, அவரது நண்பர் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்துவந்த போலீஸார், நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
ரங்கசாமி அளித்த வாக்குமூலத்தில், “தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளதால் தன்னை மறந்துவிடும்படி இளம்பெண் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்ததால் வீட்டின் பின்புறம் சென்று, துப்பட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு தனது நண்பர் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் ரங்கசாமி கூறியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
ராமதாஸ் கண்டனம்
இந்த கொலை சம்பவத்துக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காதலிக்க மறுத்த காரணத்துக்காக இளம்பெண் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கும்பலின்இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது கண்டிக்கத்தக்கவை. இவை சமூக அமைதியை குலைக்கக் கூடியவை.
காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதைவிட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது. இளைஞர்களை தவறாக வழிநடத்தும் கும்பல்களை சமூகங்கள் புறக்கணிப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்.
ரங்கசாமி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.