களியக்காவிளை சோதனை சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த்.படங்கள் மு. லெட்சுமி அருண். 
தமிழகம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 636 பேருக்கு தொற்று; குமரி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் மரணம்: அச்சத்தால் சொந்த ஊர் திரும்பும் வெளி மாநிலத் தொழிலாளர்கள்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று அச்சம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 212 பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 84 பேருக்கும், மாவட்டத்தின் பிறபகுதிகளில் 128 பேருக்கும் தொற்று உறுதி செயய்ப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 19, மானூர் 13, நாங்குநேரி- 13, பாளையங்கோட்டை- 34, பாப்பாக்குடி- 3, ராதாபுரம்- 5, வள்ளியூர்- 19, சேரன்மகாதேவி- 10, களக்காடு- 12. தற்போது மாவட்டத்தில் 1,398 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 17,822 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் 16,317 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 221 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கி பணிபுரிந்துவந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்கிறார்கள். உடமைகளோடு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறையில் ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதியான தையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு பணி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 277 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,021 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,523 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 1,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் மொத்தம் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் 73 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலை சேர்ந்த 58 வயது பெண், பள்ளிவிளையை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தனர்.

இவர்கள் உட்பட குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் புதுத்தெருவில் 4 குடும்பங்களை சேர்ந்த 7 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உறவினர்கள், தொடர்பில் இருந்தவர் கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொளளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்தறையினர் அத்தெருவில் தடுப்புகள் அமைத்து மூடினர். அவ்வழியாக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார். கேரள எல்லை பகுதியான களியக்காவிளை, காக்கா விளை சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் வாகன சோதனை மற்றும் கேரளா வழியாக வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வது, வாகன கண்காணிப்பு பதிவேடு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தினார். ஆய்வின்போது பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருநெல்வேலியில் ரயில்வே பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

முகாமில் ரயில்வே பணியாளர்கள், அலுவலர்கள் 150 பேர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து கரோனா தடுப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை சீனிவாசன் அனைவருக்கும் வழங்கினார்.

மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் ரயில்வே மேலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் , முக கவசம் வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 74 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,412 ஆக உயர்ந்தது. இவர்களில் 8,706 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 61 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். தற்போது 543 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 163 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT