இந்தியா ஏன் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை ராஜ்நிவாஸ் முன்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்.16) தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியை அதிகமானோர் போடுவதன் மூலம் கரோனா பரவல் தடுக்கப்படும்.
நாம் ஏன் தடுப்பூசியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம் என்ற கேள்வி உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை நமக்குக் கொடுக்கும்போது உலகத்தில் உள்ள சுகாதார நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு தடுப்பூசியை வெளிநாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளன. அதன் பேரில் வெளிநாடுகளுக்குத் தடுப்பூசிகளைக் கொடுக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், மருத்துவ ரீதியாக உலகத்தில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தடுப்பூசி போடும்போது கரோனாவின் தாக்கம் குறையும். நம்முடைய மாநிலத்தில் அதிகமான இடத்தில் தடுப்பூசி போட்டால், எதிர்ப்பு சக்தியால் கரோனாவின் தாக்கம் குறையும். எனவே, அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தொற்று அதிகமுள்ள இடங்களை மூடுமாறு பலர் ஆலோசனை கூறுகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் ஊரடங்கு தொடங்கிவிட்டது. புதுச்சேரியில் மக்களுக்காகத்தான் ஊரடங்கு என்ற அளவுக்குப் போகாமல் இருக்கிறோம். நாம் இன்னும் முகக்கவசம் அணியாமல் நோய்த் தொற்றை அதிகரித்துக் கொண்டே சென்றால் பகுதி நேர ஊரடங்கைச் சிந்திக்க வேண்டிய நிலை வரும். முழு ஊரடங்கு போன்ற நிகழ்வுகள் வராது. எனவே, நோய்த் தொற்றைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடமாடும் கரோனா தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். அதன்பிறகு லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட ஆளுநர், கரோனா பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த தொற்று கண்டறியப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் 104 கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணின் செயல்பாடு குறித்துக் கேட்டறிந்தார். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் ஆலோசனை வழங்கினார்.