புதுச்சேரியில் நடமாடும் வாகனம் மூலம் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை ராஜ்நிவாஸ் முன்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்.16) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ஆளுநரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறைச் செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘கரோனாவை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். என்னென்ன வகையில் குறைபாடு உள்ளதோ, அதை ஒவ்வொரு நாளும் கூட்டம் போட்டு, சரிசெய்து வருகிறோம். நேற்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பேசினேன்.
அனைத்து இடங்களிலும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதனை நிவர்த்தி செய்வதற்கான அனுமதி கொடுத்துள்ளேன். கரோனா தடுப்பூசி முகாமுக்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்களோ, அங்கெல்லாம் நடமாடும் தடுப்பூசி வாகனத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. ஏனென்றால், முதலிலேயே நமது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1.10 லட்சம் தடுப்பூசிகளைக் கொடுத்துள்ளது.
கரோனா தடுப்பூசி திருவிழாவில் மட்டும் 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய முயற்சி. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து, முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தைத் தெளிவுபடுத்தி உள்ளோம். அதற்கான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், மார்க்கெட் போன்ற மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
இதில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று மாலை நோய்த் தொற்று தடுப்பு நிர்வாகக் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளோம். இதேபோல், மக்களுக்காகத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.