கரோனா தொற்று முதல் அலையைவிட இப்பொழுது இரண்டாவது அலை பேராபத்தானது, எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் தவறாமல் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பத்தியங்களைத் தவறாமல் பின்பற்றவேண்டும். இது நமக்காகத்தானே தவிர, சட்டத்துக்காக அல்ல. இவற்றில் அலட்சியம் காட்டுவது தற்கொலைக்கான செயல்பாடே கி.வீரமணி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வருமாறு:
“கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக வேகமாக நம் நாட்டு மக்களைத் தாக்கி வருகிறது. முதல் கொடுந்தொற்றான கரோனாவின் அறிகுறிகள் முதல் அலையில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வாசனை தெரியவில்லை ஆகிய அறிகுறிகள் பிரதானமாக இருந்தன.
இப்போது இந்த அறிகுறிகளைக் காட்டிலும், உடல்வலி, உடல் அசதி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, சிவந்த கண்கள், கைவிரல்களில் சிவப்புத் திட்டுக்கள் தோன்றுவது ஆகியவை முதன்மை அறிகுறிகளாகின்றன. இவை மட்டுமல்லாமல், மரபணு மாறிய கரோனா வைரஸ்கள் இப்போது ஒரு ‘திருட்டுத்தனம்‘ செய்யவும் ஆரம்பித்துள்ளன. இத மிகவும் கவலை தரும் செய்தி.
கரோனா இரண்டாம் அலையின் ஆபத்து
முதல் அலையில் கரோனா கிருமிகள் நம் மூக்குப் பகுதியிலும், தொண்டையிலும்தான் தங்கும். ஆனால், இரண்டாம் அலையில் கரோனா கூர்ப் புரதங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களால், மூக்கில் தங்காமல், நேரடியாக நுரையீரல்களுக்குச் சென்று ஒளிந்து கொள்கின்றன.
இங்கேதான் பேராபத்து தொடங்குகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சளிப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் கூறிவிடுவதால், அவர்களுக்குக் கரோனா தொற்றுக்கான சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களே தங்களுக்குத் தொற்று இருப்பது தெரியாமல், முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி இல்லாமலும், பொதுவெளியில் நடமாடுகின்றனர்.
இதனால், அடுத்தவர்களுக்கு கரோனா தொற்றைப் பரப்புவர். இந்த சூப்பர் ஸ்பிரடர் (Super Spreader) பரவலால் ஒருவர் 60 பேருக்கு பரப்பி விடுகின்றனர். இது முதல் அலையில் 20 பேர் என்பதிலிருந்து மாறிவிட்டது. இப்படி பிரபல டாக்டர்கள் எழுதுகின்றனர்.
நாம் கைக்கொள்ள வேண்டியவை
எனவே, இந்த காலகட்டத்தை மிகவும் எச்சரிக்கையுடனும், அதிக கவனத்துடனும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்டு தக்க சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அலட்சியம் காட்டாமல் நடந்துகொள்ளவேண்டியது மிக மிக மிக அவசியமாகும்.
1. தடுப்பூசி போட்டுக் கொள்வது (பொதுச் சமூகக் கண்ணோட்டத்தில் முக்கியம்).
2. முகக்கவசம் அணிவது கட்டாயம்.
3. தனி மனித இடைவெளி காப்பது.
4. தூய்மை, சுகாதாரம் பேணுவது.
5. முடிந்தவரை வீட்டில் இருப்பது.
6. கூட்டம் கூடாமல் இருப்பது.
7. பயணங்களைத் தவிர்ப்பது.
போன்றவற்றில் நாம் போதிய விழிப்புணர்வோடு நடந்துகொள்வதும் இன்றிமையாதது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதும், கட்டுவதும் நமக்கு நாமே தண்டனையை வலிந்து பெற்றுக்கொள்ளும் வெட்கக்கேடானதல்லவா? காவல்துறைக்காகவா நாம் முகக்கவசம் அணியவேண்டும்? நம் உயிர்ப் பாதுகாப்புக்காக; மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக என்பதை ஏனோ மறக்கலாமா?
வேண்டாம் தற்கொலை முயற்சி
வருமுன்னர் காப்பதற்கு மேலே கூறிய எளிய வழிகள் நம் கையில் இருக்கும்போது, நம் முடிவைப் பொறுத்து செயல்படவேண்டிய நிலையில் இருக்கும்போது, அதில் அலட்சியம் காட்டுவது அறிவுடைமையா? தற்கொலை முயற்சி அல்லவா.
எனவே, பெருமக்களே, விழிப்போடு இந்த அலையை வெல்லுவோம் என்று உறுதி பூண்டு - கட்டுப்பாடு காத்து வாழ்ந்து தங்களையும், சமூகத்தையும் மீட்டெடுங்கள்”.
இவ்வாறு கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.