தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் வி.அறிவுடைநம்பி. தேர்தலின்போது முழு வீச்சில் பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரித்த இவர் அண்மையில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்த பிறகு உடல் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், தஞ்சாவூர் திலகர் திடல் பகுதியில், தனியார் மருத்துவமனையில் நேற்று காலை சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அறிவுடைநம்பி சிகிச்சை பெற்று வருகிறார்.
வேட்பாளர்களுக்குத் தொற்று
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து, காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இவர்களுடன் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் மற்றும் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர். திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.