மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களை நகைச்சுவையாகக் கொண்டு செல்லாமல் சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே கொண்டு செல்கிறார் விவேக். அவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார். சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள விஷயங்களைக் கையிலெடுத்துச் செயல்படுத்துகிறார்.
அப்துல் கலாம் மீது பற்று கொண்டதால் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக அரசின் டெங்கு விழிப்புணர்வு, கரோனா விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வுக்குப் பிரச்சாரம் செய்தார் விவேக்.
இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படுகிறது. அதே நேரம் விவேக்கின் இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே விவேக்கின் உடல்நிலை குறித்து அவரது பிஆர்ஓ நிகில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''விவேக் நலமாக இருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெற்று செய்தியாளர்களைச் சந்திப்பார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்'' என்று கூறினார்.
விவேக் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.