தமிழகம்

தூத்துக்குடியில் 8,723 ஏக்கர் விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்காமல் அலட்சியம்; முன் காரீப் பருவம் பாதிப்பு: விவசாயிகள் சங்கம் கண்டனம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் முன் காரீப் பருத்திற்காக 8,723 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியே நீர் திறக்க வேண்டும். ஆனால், தேர்தலைக் காரணம் காட்டி நீர் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள விவசாய சங்கம், நீர் திறந்துவிடக் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 46,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து மருதூர் அணைக்குத் தண்ணீர் வந்து அதிலிருந்து நான்கு பிரதான கால்வாய்கள் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.

வருடத்திற்கு இரு பருவங்கள் (கார், பிசானம்) விவசாயம் செய்யப்படுகின்றன. இதில் கார்பருவம் ஜூன் மாதம் தொடங்கும். ஆனால், தண்ணீர் அதிகமாக இருக்கும் காலங்களில் 8,723 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் முன்கூட்டியே சாகுபடி செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இதற்கு முன் கார் சாகுபடி என்று பெயர். முன் கார் சாகுபடிக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், ஏப்ரல் 16ஆம் தேதி ஆன பிறகும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுப்பணித் துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன் கார் பருவம் பயிரிட வாய்ப்பிருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஆண்டு பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதால் தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

விவசாயிகள் பயிர் செய்வதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளனர். எனவே, தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் பாசனத்திற்கான தண்ணீரைத் திறந்துவிட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT