பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மூச்சுத் திணறலுக்குப் பிறகே மருத்துவமனைக்கு வருவதுதான் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்: புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் பேட்டி

செ. ஞானபிரகாஷ்

அறிகுறி ஏற்பட்டும் பரிசோதிக்காமல் மூச்சுத் திணறல் வந்த பிறகே மருத்துவமனைக்கு வருவதுதான் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்று புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் 4,814 பேர் பரிசோதிக்கப்பட்டு 534 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மார்ச் 1-ம் தேதி ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 20 மடங்கு அதிகமாகியுள்ளது. தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் அலர்ஜி ஏற்படவில்லை.

பயத்தை விட்டுவிட்டு தடுப்பூசி போடலாம். 5 நாட்களில் தடுப்பூசி திருவிழாவில் 52 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். சுகாதாரத் துறை மூலமாக 100 இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டு மட்டுமில்லாமல் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் அடையாள அட்டையுடன் வரலாம். தடுப்பூசியும் போதிய எண்ணிக்கையில் உள்ளது.

இறப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 75 சதவீத கரோனா இறப்புக்கு, தாமதமாக மருத்துவமனையில் சேருவதுதான் முக்கியக் காரணம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் இறந்துள்ளனர். அறிகுறி ஏற்பட்டும் பரிசோதிக்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு கடைசி நேரத்தில்தான் மருத்துவமனை வருகிறார்கள்.

கரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பரிசோதியுங்கள். மக்கள் ஒத்துழைப்பு முக்கியம். குறிப்பாகத் தொடர் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உடன் பரிசோதியுங்கள். வாழ்க்கையும், வாழ்வு ஆதாரமும் முக்கியம். அதனால்தான் சமூக இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் முக்கியம்".

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT