புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் தருவதாக கூறப்பட்டது.
தற்போது, நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.120 கோடி செலவில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்க அறிவிப்பு வெளியானது.
அவற்றை பெறுவதற்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பொது மக்கள் ஆத்திரம்
டோக்கன் எடுத்து வரும் அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கப்படுவதாக தகவல் வெளி யானதைத் தொடர்ந்து, டோக்கன் பெற்றிருந்த நேற்று அதிகாலையே 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். இதற்கிடையே, பணியில் இருந்த போலீஸார் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் வரிசையில் நிற்காமல் மிக்ஸி, கிரைண்டர் பெற்றுச் சென்றனர். மேலும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனால், வரிசையில் காத்திருந் தவர்கள் ஆத்திரமடைந்தனர். தங்க ளுக்கு மிக்ஸி, கிரைண்டர் கிடைக் காமல் போய்விடும் என்ற அச்சத் தில் முந்திச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி பெண் கள் பலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் சண்முகாபுரத்தைச் சேர்ந்த லட்சுமி, கதிர்காமத்தைச் சேர்ந்த பாக்கியம், ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த ஜோதி உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
இதனால் பள்ளி அருகே உள்ள வழுதாவூர் சாலை யில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட் டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். முதல்வர் ரங்கசாமி தொகுதியில் நடந்த போலீஸாரின் தடியடியால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.