தமிழகம்

பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ‘தடுப்பூசி திருவிழா’ நடைபெற்று வரும் நிலையில், பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றின் 2-ம் அலை உருவாகிஉள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட தொற்று கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில்தமிழகத்தில் உச்சபட்சமாக 6,993 பேர் வரை மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது பரவி வரும் கரோனா தொற்றின் 2-ம் அலை மிகத் தீவிரமாக உள்ளது.

அதன்படி கடந்த 2 தினங்களாக தினமும் கிட்டத்தட்ட 8 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. வரும் நாட்களில் தொற்று மேலும்அதிகரிக்கலாம் என்பதால், தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வரு கிறது.

பிரதமர் அறிவுறுத்தல்

இதற்கிடையே, ஏப்.8-ம் தேதி முதல்வர்களுடனான காணொலி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்.14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘தடுப்பூசி திருவிழா’ நடத்தி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி கடந்த 2 தினங்களாக 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை நாள் ஒன்றுக்கு 2 லட்சமாக உயர்த்ததமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. சில மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்தியுள்ளதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

4,328 தடுப்பூசி மையங்கள்

குறிப்பாக தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள், 1,900 மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி, கடந்த ஜன.16 முதல் தற்போது வரை 1.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏப்.14-ம் தேதி வரை தமிழகத்துக்கு 54.85 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வந்துள்ளன. இதில்42 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், தொழிற்சாலைகள், ஐடி நிறு வனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் தடுப்பூசி முகாம்களை நடத்த சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கோரிக்கைகள் அடிப்படையிலும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு, கோவிஷீல்டு 15 லட்சம், கோவேக்சின் 5 லட்சம் என 20 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

SCROLL FOR NEXT