மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம். (வலது) கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர். படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: கரோனா பரவலால் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலால் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே ஆகம விதிப்படி திருவிழா நடத்த வழிகாட்டு முறைகளுடன் அரசு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்காக சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக் கொடிமரம் மலர்களால் நேற்று காலையில்
அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் 10.30 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்புப் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். கொடியேற்றத்தைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் யூ-டியூப் மற்றும் இந்து சமய அறநிலைய துறை இணைய தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் க.செல்லத்துரை கலந்து கொண்டனர். பழைய திருக்கல்யாண மண்டபத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.

SCROLL FOR NEXT