கலவரத்தை தூண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது:
அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் கொல்லப்பட்டது நடந்திருக்க கூடாத சம்பவம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு இதில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி திமுக, விசிக போன்ற கட்சிகள் சாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது விசிகவினர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாஜகவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பேத்கர் தேசியத் தலைவர். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். அவருக்கு மரியாதை செலுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. அதனைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
சாதி கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வன்முறையில் ஈடுபட்ட விசிகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் விசிகவினர் தடுத்த அதே இடத்தில் இன்று அம்பேத்கர் சிலைக்கு நான் மாலை அணிவிக்க இருக்கிறேன்.
தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே 4 நாள் தடுப்பூசி திருவிழா இயக்கம் நடத்தப்பட்டது. இதுகூட தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே உள்ளது. மாநகராட்சி ஆவணங்களில், பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்று மாற்றியவர்கள், நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் மாற்றவில்லை. திமுக ஆட்சியில் இருந்தபோதும் மாற்றவில்லை. இந்தப் பிரச்சினையில் அரசு எடுக்கும் முடிவை பாஜக வரவேற்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
50 விசிகவினர் மீது வழக்கு
மதுரையில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக நிர்வாகி குன்னத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாண்டியம்மாள், சிறுத்தை பாண்டியம்மாள், கதிரவன், மோகனா, தாமரை வளவன் உட்பட 50 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.