வருகிற மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர் உட்பட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வணிக வரி, பத்திரப்பதிவுத்துறை அரசு முதன்மை செயலர் மருத்துவர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மாவட்ட நிர்வாகம் மூலம் கரோனா நோய் பரவாமல் தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளின் வழியாக வரும் வாகனங்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதை உறுதிபடுத்த வேண்டும். மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. கரோனா நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு தடுப்பூசியே சிறந்த வழி. அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
மேலும், சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் வருகிற மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தரும் அரசியல் கட்சி முகவர்கள், பிரதிநிதிகள், வேட்பாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதி படுத்த வேண்டும், வாக்கு எண்ணும் மையமான அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் கரோனா நோய்தொற்று தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர், டிஆர்ஓ சதீஸ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துசெல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.