வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள், தமிழகத்தில் ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சி பெறுவதற்கான மருத்துவமனையை ஒதுக்கீடு செய்து ஏற்கெனவே ஆணை வழங்கப்பட்டது. இதற்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கு அவர்கள் டிடி எடுத்த நிலையில், உள்ளிருப்பு பயிற்சியை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, ஏற்கெனவே விண்ணப்பம் சமர்ப்பித்த அரும்பாக்கம் மருத்துவக் கலந்தாய்வு மையத்தில் வெளிநாட்டு எம்பிபிஎஸ் பட்டதாரிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். படம்: க.பரத் 
தமிழகம்

ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சி தற்காலிக நிறுத்தம்- வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். அங்கு படிப்பு முடிந்து வரும் தமிழக மாணவர்கள் இந்தியாவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு டாக்டருக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

தற்போது கரோனா காலம் என்பதால் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடிந்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள்ளிருப்பு பயிற்சி இல்லாமலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் வெளிநாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு முடித்திருந்தால், உள்ளிருப்பு பயிற்சி இல்லாமல் அடையாள அட்டைவழங்கப்படும். 4 ஆண்டு மருத்துவ படிப்பு முடித்திருந்தால் ஒராண்டு கட்டாயம் உள்ளிருப்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த உள்ளிருப்பு பயிற்சிக்காக, தொடர்புடைய மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாணவர்கள் தடையில்லா சான்றிதழ்களைப் பெறவேண்டும். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சில மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களுக்கு தடையில்லா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. இதனால் ஒரே கல்லூரியில் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையை விட பல மாணவர்கள் சேரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முதல்வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான உள்ளிருப்பு பயிற்சியை தமிழக மருத்துவ கவுன்சில் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இந்த முடிவை எதிர்த்து சில மாணவர்கள் தங்களதுபெற்றோருடன் சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, “தமிழகத்தில் மருத்துவ உள்ளிருப்பு பயிற்சி பெற, கட்டணம் குறைவாக உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் தடையில்லாச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது,ஒரு மருத்துவமனையில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக பயிற்சியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலுமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே அரசு இதற்கு உடனே தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT