சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள். 
தமிழகம்

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்: நிதி ஒதுக்கப்பட்டும் சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை என புகார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாவேந்தர் தெரு, புத்தர் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் புதியதாக சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கி 6 மாதமாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை விளக்கம் கேட்டும் ஊராட்சி செயலர், ஒன்றிய நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காததால் அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர்பாய் மற்றும் தலையணைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை, ஒப்பந்ததாரர் பணியை செய்யாமல் இருக்கிறார். அவரை விரைந்து பணி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீறும் பட்சத்தில் வேறு ஒப்பந்ததாரரை வைத்து பணி தொடங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதி வாழ் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பாவேந்தர் தெரு, புத்தர் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு ஆகிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 3 சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியை எடுத்த ஒப்பந்ததாரருக்கு ஏற்கெனவே செய்த பணிக்கு நிதி வழங்கவில்லை. இதனால், புதிய பணியை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதியில் முறைகேடு ஏதுவும் நடைபெறவில்லை. விரைந்து பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT