திருப்பரங்குன்றம் அருகே மலைப்பகுதியில் திடீரென கட்டப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அருகே உள்ளது உச்சாமேடு. மலையை ஒட்டியுள்ள இந்தப் பகுதி பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. மக்கள் வாழ உகந்த இட மல்ல என வருவாய்த் துறையினர் தடை செய்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன் உச்சா மேட்டின் ஒரு பகுதியில் சில வீடுகள் கட்டப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திடீரென நூறுக் கும் மேற்பட்டோர் வீடுகளை கட் டத் தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்தும் தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை. இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் போலீஸார் பாதுகாப்புடன் உச்சாமேட்டுக்கு அதிகாரிகள் வந்தனர். புதிதாக கட்டப்பட்ட வீடுகளை இயந்திரங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர். அப்போது மக்கள் வருவாய்த்துறை வழங்கிய தாகக் கூறி பட்டா மற்றும் மாநக ராட்சி வரி ரசீதை காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் பட்டா ஏதும் வழங்கவில்லை எனக் கூறிய அதிகாரிகள் நூறுக்கும் அதிகமான வீடுகளை இடித்து அகற்றினர். அதே பகுதியில் வேறு இடங்களில் கட்டப்பட்ட சில வீடுகளை அலுவலர்கள் அகற்றாமல் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
நோட்டீஸ் வழங்கி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப் படும் என அலுவலர்கள் தெரி வித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இப்பகுதி மக்களைத் தவறாக வழிநடத்தி அரசியல் பிரமுகர்கள் பட்டா வாங்கிக் கொடுத்ததாகவும், இதற்கு மின் இணைப்பு, மாநகராட்சி வரி ரசீது வழங்கியதில் நடந்த விதிமீறல் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.