சிவகாசி அருகே வெடி விபத்து நடந்த பட்டாசு அறை. 
தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் காயம்

செய்திப்பிரிவு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் தேசிங்குராஜ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை வச்சக்காரப்பட்டி அருகே சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். அப்போது ஒரு அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.

இதில் அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆனையூரைச் சேர்ந்த பாண்டி மனைவி ஆதிலட்சுமி (34), ராமர் மனைவி செந்தி (35), ராமச்சந்திரன் மனைவி முத்துமாரி (37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆதிலட்சுமி 100 சதவீதமும், செந்தி, முத்துமாரி, சுந்தரபாண்டி ஆகியோர் 70 சதவீதமும் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT