தமிழகத்தில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 412 விசைப்படகுகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 150 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தடை காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 248, வேம்பாரில் 25, தருவைகுளத்தில் 139 என மொத்தம் 412 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 61 நாட்களையும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
இக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அரசு சார்பில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த ஆண்டும் சரியான மீன்பாடு இல்லாததால், கடந்த 1-ம் தேதி முதலே பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை எனவே,மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.
குமரி மாவட்டம்
கிழக்கு கடல் பகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக தங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதேநேரம், குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் வழக்கம்போல் மீன்பிடி பணிகள், வர்த்தகங்கள் பரபரப்பாக நடந்து வருகிறது.