தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா 2-வது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மிகக்குறைவாகவே இருந்து வரு கிறது.
இம்மாவட்டத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு வெறும் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியது:
இம்மாவட்டம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாவட்டம். அதனால் அத்தியாசிய தேவை இல்லாமல் வெளியே செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால், பெரிய அளவிலான பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சந்தைகள் இம்மாவட்டத்தில் இல்லை.
மக்கள் நெருக்கமாக வசிக்கும் நகர்ப்புற பகுதி மிகவும் குறைவு. பன்அடுக்குமாடி குடியிருப்புகளும் பெரிய அளவில் இல்லை. வீடுகளும் சற்று இடைவெளி விட்டு அமைந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் கரோனா தொற்று பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா ராணியிடம் கேட்டபோது அவர் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை குறைக்கும் பணியில் இரவு பகலாக சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தொகை எண்ணிக்கை குறைவு, வசிப்பிடங்களுக்கிடையே அதிக இடைவெளி ஆகியவையும் கரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம்.
இங்குள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் வெளி மாநில, வெளிமாவட்டத்தினர் அதிகம் பணிபுரிவதால் அங்கு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் சுகாதார குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தியும், பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தியும் வருகிறோம். இதுபோன்ற காரணங்களால் தொற்று பரவல் குறைவாக உள்ளது.
இதுதவிர இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பிழைப்புக்காக சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு வெளிமாவட்டத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் தான் இம்மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல, வெளியூர்களுக்கு பிழைப்புக்காக சென்றவர்கள் பெரம்பலூருக்கு திரும்பினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை இம்மாவட்டத்திலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கான முன்னேற் பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.
8 பேருக்கு கரோனா
பெரம்பலூரில் நீதிபதி, வழக்கறிஞர்கள் உட்பட 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நேற்று வழக்காடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.