தமிழகம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் சந்தைகளுக்கு அனுப்ப முடியாமல் வாழை இலைகள் தேக்கம்: காய்ந்து சருகாகி வருவதால் விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக வெளி சந்தைகளுக்கு அனுப்ப முடியாமல் வாழை இலைகள் தேக்க மடைந்து காய்ந்து சருகாகி வருவதாக தஞ்சாவூர் மாவட்ட வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் உணவு இலைகளுக்கு உரிய வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து நாள் தோறும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதி களில் செயல்படும் சந்தைகள் மற்றும் உணவகங்களுக்கு வாழை இலைகள் அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்நிலையில், கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருவதால், சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட், திருச்சி காந்தி மார்க்கெட் ஆகியவற்றின் செயல் பாடுகள் குறையத் தொடங்கி உள்ளன. மேலும், கரோனா பரவலால் உணவகங்களுக்கு பொதுமக்களின் வருகையும் குறைந்து வருகிறது. இதனால் வாழை இலைகளின் தேவை குறைந்து, விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்ட வாழை இலைகள் காய்ந்து, சருகாகி வருவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.மதியழகன் கூறிய தாவது: கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வாழை உற்பத்தி யாளர்கள் ரூ.14 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்தனர். தற்போது, கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மார்க்கெட் இடமாற்றம், உணவகங்களில் 50 சதவீத கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால், வாழை இலை களின் தேவை குறைந்துள்ளது.

இதன் காரணமாக, வாழையை நம்பி பிழைப்பு நடத்திவரும் அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளோம். உற்பத்தி செய்யப்பட்ட வாழை இலைகள் சொற்ப அளவிலேயே விற்பனையாகின் றன. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு தினமும் 10 லட்சம் வாழை இலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினமும் 1 லட்சம் அளவில்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், அறுவடை செய்த வாழை இலைகள் தேக்கமடைந்து, வெயிலில் காய்ந்து சருகாகி வருகின்றன. மேலும், பலர் இலைகளை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டதால் மரத்திலேயே காய்ந்து வருகின்றன என்றார்.

SCROLL FOR NEXT