பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் அருகே தேமுதிக சார்பில் கடந்த 27-ம் தேதி ரத்ததான முகாம் நடந்தது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டார்.
இதற்கு பத்திரிகையாளர்களும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். விஜயகாந்தின் அநாகரீக நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இதையறிந்து விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி மற்றும் தேமுதிகவினர் அங்கு கூடினர். விஜயகாந்த்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் கோஷங்கள் எழுப்ப, ஆத்திரம் அடைந்த தேமுதிகவினர், பத்திரிகையாளர்கள் மீது சரமாரி கற்களை வீசி தாக்கினர். சாலையில் ஓடிய பத்திரிகையாளர்களை விரட்டி கற்களை வீசினர். இதில் பல பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, பார்த்தசாரதி எம்எல்ஏ உட்பட தேமுதிகவினர் 19 பேர் மீது தாக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 19 பேரையும் கைது செய்த போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 19 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஜயகாந்த் மீது புகார்
இந்நிலையில், தாக்குதலை தூண்டி விட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.