கரோனா தொற்று பரவல் எதிரொலியாக திருவண்ணாமலை அருகே உள்ள அறிவியல் பூங்கா மூடப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரிக்கரை அருகே ரூ.3 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், அறிவியல் சார்ந்த படைப்புகள் மற்றும் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்மூலம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அறிவியல் பூங்காவுக்கு மாணவர்களின் வருகை அதிகம் இருந்தது. மேலும், நடைபயிற்சிக்கான பாதை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழும் அம்சங்களும் இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, அறிவியல் பூங்கா நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் முதியவர்களின் நலனில் அக்கறை கொண்டு அறிவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்தாண்டு மார்ச் 24-ம் தேதி முதல் நவம்பர் முதல் வாரம் வரை, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவியல் பூங்கா மூடி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.