அறக்கட்டளை கணக்குகளை சரத்குமார் இன்னும் ஒப்படைக்க வில்லை என நடிகர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் சங்கம் நிர்வாகிகள் மீது சரத்குமார் கூறியுள்ள குற்றச் சாட்டுகளுக்கு நாங்கள் விளக்கம் தர உள்ளோம். நடிகர் சங்கத் தின் கணக்கு வழக்குகள் இரண்டு விதமாக பராமரிக்கப்படுகிறது. ஒன்று நடிகர் சங்க சட்ட விதிகளுக்கு உட்பட்டது. மற்றொன்று அறக் கட்டளை சட்ட திட்டத்துக்கு உட்பட்டது. நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தவுடன் 7 நாட்களுக்குள் நடிகர் சங்கக் கணக்குகளையும், 15 நாட்களுக்குள் அறக்கட்டளை கணக்குகளையும் புதிய நிர்வாகி களிடம் ஒப்படைப்போம் என்று சரத்குமார் ஊடகங்களில் தெரிவித் தார்.
தேர்தல் முடிந்து ஒரு மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் கணக்குகளை ஒப்படைக்க வில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பினோம். அதன் பின்னர் நவம்பர் 27-ம் தேதி 2014-2015ம் ஆண்டுக்கான நடிகர் சங்க கணக்கை மட்டும் ஒப்படைத்தனர். அதிலும் ஏப்ரல் - அக்டோபர் வரையிலான 6 மாதக் கணக்கு குறிப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த ஒரு வருடக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு கடந்த இரண் டரை வருடங்களுக்கான கணக்கு தரப்படவேண்டியுள்ளது.
கடந்த டிசம்பர் 26 அன்று நடைபெற்ற நடிகர் சங்க செயற் குழு மற்றும் அறக்கட்டளைக் கூட்டத்துக்குப் பின், நடிகர் சங்க கணக்கு வழக்குகளை பழைய நிர்வாகிகள் உடனே ஒப்படைக்க வில்லை எனில் சட்டப்படி நட வடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருந்தோம்.
அதற்குப் பதில் சொல்லாமல், நடிகர் சங்க கணக்கை மட்டும் கொடுத்துவிட்டு, கணக்கை ஒப்படைத்துவிட்டதற்கான ரசீது வைத்துள்ளோம் என்றும் புதிய நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால் அறக்கட்டளைக் கணக்கை ஒப்படைப்பேன் என்றும் முன்னுக்குப் பின்னாக சரத்குமார் கூறியுள்ளார்.
முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது பல வருடங்களாக தலை வர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி, சந்திரசேகருக்கு தெரியாதா? அவர்கள் கணக்கை ஒப்படைத்த 21 நாட்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட நடிகர் சங்கம் தயாராக உள்ளது. உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.