ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களை அறிவித்து மோசடி செய்த ஜோதிடருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 லட்சம் அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரான்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிடர் ஈஸ்வரமூர்த்தி (49). இவர், திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தில் ஸ்ரீ சபரி ஆண்டவர் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிக் குஞ்சுகள் அளித்து, அதற்கான கூரை, தீவனம், 24 மாதங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் பராமரிப்புத்தொகை, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் அளிக்கப்படும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஈமு கோழிகளை பெற்றுக் கொண்டு முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார்.
இதுதவிர, விஐபி திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஈமுகோழிக் குஞ்சுகளை பண்ணையிலேயே வளர்த்து, 2 ஆண்டுகளில் செலுத்திய முதலீடு திருப்பி வழங்கப்படுவதுடன், மாதம் ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகை, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் அளிக்கப்படும் என்ற மற்றொரு கவர்ச்சிகர திட்டத்தையும் அறிவித்தார்.
இதைப் பார்த்து 11 பேர் ரூ.15.58லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பராமரிப்புத்தொகை, போனஸ் ஆகியவை அளிக்கப்படவில்லை. இதையடுத்து, திருப்பூர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 2012-ம் ஆண்டு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் (சிசிபி) புகார் அளித்தார்.
அவர்கள் வழக்குப்பதிவு செய்து, வழக்கை கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்தனர். இந்த வழக்கு, கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ஈஸ்வரமூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 லட்சம் அபராதம் விதித்து இன்று (ஏப்.15) உத்தரவிட்ட சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி, தீர்ப்பு வழங்கும்போது ஈஸ்வரமூர்த்தி ஆஜராகாததால், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.மாணிக்கராஜ் ஆஜரானார்.