தமிழகம்

பெண்கள் அதிக அளவில் வாக்களித்தது அதிமுக கூட்டணிக்கே சாதகம்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உறுதி

என்.மகேஷ்குமார்

தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவீதம் எங்கள் பக்கம்தான் உள்ளது. இது நிச்சயமாக அதிமுக கூட்டணிக்குத்தான் சாதகம் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ‘இந்து தமிழ் திசை’யிடம் தெரிவித்தார்.

திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக - ஜனசேனா கூட்டணி கட்சியின் வேட்பாளராக கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ரத்னபிரபா. ஐஏஎஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட பல கட்சி நிர்வாகிகள் சில நாட்களாக திருப்பதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக எல்.முருகனுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

அதிமுகவுடனான கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மாநில, மத்திய அரசுகள் செய்துள்ளன. தமிழக மக்கள் எப்போதுமே வளர்ச்சியை விரும்புபவர்கள். ஆதலால் இக்கூட்டணி மாபெரும் வெற்றிபெறுவது உறுதி.

பெண் வாக்காளர்களின் வாக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. இது உங்கள் கூட்டணிக்கு சாதகமா, பாதகமா? எப்படி நினைக்கிறீர்கள்?

இது நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு சாதகம்தான். திமுகவுக்கு பெண்கள் வாக்கு அவ்வளவாக பதிவாகாது. இது காலம் காலமாக வருவதுதான். அதிமுகவுக்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி என இவர்களுக்கு அதிகமாக பெண் வாக்காளர்களின் ஓட்டு பதிவாவது வழக்கம். அப்படி பார்த்தால் தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவீதம் எங்கள் பக்கம்தான் உள்ளது.

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அமைச்சரவையில் இடம் பெறுமா?

இது கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கமலும், வானதி சீனிவாசனும் போட்டியிட்டுள்ள கோவை தெற்கு தொகுதியின் முடிவுகள் எப்படி இருக்கும்? அங்கு பாஜகவின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

2016 தேர்தலில் தனித்து போட்டியிடும்போது, கூட்டணி பலம் இல்லாமலேயே 36 ஆயிரம் வாக்குகள் பெற்றோம். அதன் பிறகு நல்ல வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம். மக்கள் மனதில் வானதி சீனிவாசன் நல்ல இடத்தை பிடித்துள்ளார். ஆதலால், கோவை தெற்கில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

தேர்தலின்போது சில இடங்களில் அதிமுக - பாஜகவினருக்கு இடையே சில மனக்கசப்புகள் வந்ததாக கூறப்படுகிறதே?

அப்படி எங்கும் நடக்கவில்லை. அது வீண் பிரச்சாரம்.

சென்னை ஈ.வே.ரா சாலையின் பெயர் மாற்றத்துக்கு பின்னால் பாஜகவின் அரசியல் அழுத்தம் உள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இது குறித்து கூறவும்.

இது ஒரு சமூக வலைதளங்களில் மட்டுமே பரவும் செய்தி. இதுவும் வீண் புரளியாகும். மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டம், ‘நீட்’ தேர்வுமுறை போன்ற அனைத்து திட்டத்துக்கும் திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது ஒப்புதல் கையெழுத்தை போட்டுவிட்டு, தற்போது அதே திமுக இத்திட்டங்களை எதிர்க்கிறது. அதுபோல்தான் இதுவும். பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரவ செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது திமுக. இதில் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சமூக வலைதளங்களில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரும் மே 6-ம் தேதி பொறுப்பேற்பதாகவும், அதற்கான அமைச்சரவை பட்டியலுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

நிச்சயமாக ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது. அந்த பாக்கியமும் அவருக்கு கிடையாது. ராசியும் கிடையாது. களத்தில் இருந்து வரும் தகவல்களின்படி, திமுக தங்களுக்கு தாங்களே மிகைப்படுத்தி கொள்கின்றனர். கருத்துக்கணிப்பும் அப்படிதான். அது கருத்துக்கணிப்புகளே கிடையாது. வெறும் கருத்துத் திணிப்புதான்.

இதனால் திமுகவுக்கு என்ன லாபம்?

மக்களிடையே ஒருவித மாயையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். அதைத்தான் செய்து வருகிறார்கள்.

அரசியலுக்கு வருவார்... வருவார் என பெரிதும் எதிர்பார்த்த ரஜினியும் கூட, அறிவிப்பு எல்லாம் செய்துவிட்டு கடைசியில் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என அறிவித்துவிட்டார். இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மையா?

பாஜகவுக்கும், ரஜினியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அவசியமும் பாஜகவுக்கு இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவார் என நானும்தான் எதிர்பார்த்தேன். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த முடிவை எடுத்திருக்கலாம்.

ஆனால், தேர்தலுக்கு முன்பு அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கியதற்கு பின்னாலும் அரசியல் உள்ளதாக கூறப்படுகிறதே?

இது அவரின் கலைச் சேவையை பாராட்டி கொடுக்கப்பட்ட விருது. இதில் பாஜகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

திருப்பதியில் பாஜக காலூன்றுவதற்காக நாடாளுமன்ற இடைத்தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ளுமா?

கண்டிப்பாக, மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் பாஜக மாபெரும் வெற்றிபெற்றது. அதேபோன்று, தற்போது திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளர் வெற்றிபெறுவார் எனும் நம்பிக்கை உள்ளது. கூட்டணி கட்சியான ஜனசேனாவின் பலமும் இதற்கு பக்கபலமாக விளங்குகிறது.

கரோனா தடுப்பூசிகள் கூட தமிழகத்தில் பற்றாக்குறையாக உள்ளது என்றும், இதற்கும் பாஜகதான் காரணம் எனவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரே?

கண்டிப்பாக தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. இது வேண்டுமென்றே திணிக்கப்படும் கருத்து.

கரோனா தொற்று அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு வருமா?

கரோனா பரவாமல் இருக்க கட்டுப்பாடுகள் அவசியம். மீண்டும் ஊரடங்கு வராது என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

SCROLL FOR NEXT