தமிழகம்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் வழிபாடு: முகக்கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

தமிழ்ப்புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலின் காரணமாக அரசு உத்தரவின் பேரில் முகக்கவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே கோயிலின்உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை. கரோனா முன்தடுப்பு நடவடிக்கையால் நேற்று பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை.

இதே போல் புதுச்சேரியில் புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோயில், ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை முதல் மாலை வரை உள்ளூர் மற்றும் வெளியூர்சுற்றுலா பயணிகளின் வருகை புதுச்சேரியில் குறைந்து காணப்பட்டது.

கடலூர்

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ்புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர்.காலை 6 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு கோபூஜை, விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சி நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு பஞ்சமூர்த்தி அபிஷேகத்தை தொடர்ந்து 9 மணி முதல் 12 மணி வரை பிலவ வருட பஞ்சாங்கம் படிக்கும் ஐதீகம் நடைபெற்றது.

சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, முருகன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு அறுபத்தி மூவர் அபிஷேகம், முருகருக்கு கிருத்திகை அபிஷேகம் ஆகியவைநடைபெற்றன. இதே போல திருவதிகை சரநாராயண பெருமாள், பண்ருட்டி வரதராஜாபெரு மாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோயில், அமராபதி விநாயகர், வைகுண்டவாச பெருமாள் கோயில், கைலாசநாதர், ஆதிவாலீஸ்வரர், சித்தி விநாயகர்,முத்துமாரியம்மன், பாலமுருகன், தேரடி விநாயகர், ஏழை மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வழிபட்டனர்.

SCROLL FOR NEXT