சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இறந்தும் கண் தானம் வழங்கிய விவசாயியை கிராம மக்கள் பாராட்டினர்.
மானாமதுரை அருகே சம்பிராயனேந்தலைச் சேர்ந்த விவசாயி மலையாளம் (85). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இறந்துவிடுவோம் என அறிந்த அவர், மகன் சங்கு பாண்டியிடம் தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இறந்த சில மணி நேரத்துக்குள் மருத்து வமனை நிர்வாகத்தினர் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர். உயிரோடு இருக்கும் போதே பலருக்கு உதவியாக இருந்த அவர், இறந்தும் கண்களை தானமாக வழங்கியதை கிராம மக்கள் பாராட்டினர்.
இது குறித்து அவரது மகன் சங்குபாண்டி கூறுகையில், எங்கள் கிராமத்தில் எனது தந்தை தான் முதன்முதலாக கண்களைத் தானமாக வழங்கியுள்ளார்.
எனது தந்தை தினமும் செய்தித்தாள் படிப்பார். அதன் மூலம் அறிந்து கண்தானம் கொடுக்க விரும்பினார் என்று கூறினார்.