மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவது தான் முதல்வரின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், தமிழக மக்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், அவர் மக்கள் நல நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகி விட்டது. மூன்றாம் கட்ட தொடர் மழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி ஆறு நாட்கள் ஆகி விட்டன. அடுத்தடுத்து பெய்யும் மழையால் ஒரு மாதமாகியும் கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஆனால், தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்ததால், அதிலிருந்து தப்புவதற்காக மொட்டை மாடிக்கு சென்றவர்கள் இன்னும் அங்கேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் வெளியே வராமல் இன்னும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற உயிர் வாழத் தேவையான பொருட்கள் கூட கிடைக்காததால், வாழ்க்கையின் மிக மோசமான நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் உணவுப் பொருட்களைப் போடும் போது, அதைக் கைப்பற்றுவதற்காக மொட்டை மாடிகளில் சிக்கித் தவிப்பவர்கள் நடத்தும் போராட்டம் கண்களில் நீரை வரவழைக்கும். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
ஒரு பக்கம் உணவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் வழங்கப்படும் உணவு வகைகளை வாங்கிக் கொள்ள அரசு மறுக்கிறது. இந்திய கடற்படை சார்பில் 2 கப்பல்களில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், 60 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள், 50 லட்சம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொண்டு வந்துள்ள போதிலும் அவற்றை பெற்றுக்கொள்ள அரசு மறுப்பதாக கடற்படை உயரதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியாத தமிழக அரசு எப்படி மக்கள்நல அரசாக இருக்க முடியும்?
கூவம் ஆற்று வெள்ளமும், கொசஸ்தலை ஆற்று வெள்ளமும் போட்டிப்போட்டுக் கொண்டு நடத்திய தாக்குதல்களால் வட சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நிலைகுலைந்து போய்விட்டன. ஆனால், வட சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்படவில்லை. அதேபோல், கடலூர் மாவட்டம் கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இடைவிடாமல் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் மூன்று கட்டங்களாக கனமழை பெய்ததால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை என கூறும் அளவுக்கு ஒட்டுமொத்த மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வடசென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்டோருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவது தான் முதல்வரின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், அரை மணி நேரம் ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தவிர வேறு எதையும் முதல்வர் செய்யவில்லை.
சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்து விட்ட நிலையில், அனைத்து உடைமைகளையும் வெள்ளத்தில் இழந்து விட்ட மக்கள், புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வழியில்லாமல் தவிக்கின்றனர். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்கள் வாழ வழி காட்ட வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தமிழக மக்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், அவர் கீழ்கண்ட மக்கள் நல நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
1. சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு சரி செய்யவேண்டும்.
2. கடலூர் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வசதியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைக் கொண்ட கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்.
3. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அதை சமாளிக்கும் பொருட்டு அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் வீதம் பாலை இலவசமாக வழங்க வேண்டும். இதை பாதிக்கப்பட்ட மக்களின் தெருக்களுக்கு கொண்டு சென்று தர வேண்டும்.
4. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும். முகாம்களுக்கு மக்களை அழைத்து நிதி உதவி வழங்கினால், கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை கே.கே. நகரில் ஏற்பட்டது போன்று நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, அனைத்து குடும்பங்களுக்குமான நிதி உதவியை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும்.
5. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், அதை சமாளிப்பதற்காக நேற்று நடைபெற்ற அதிகாரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
6. வெள்ளத்தில் சிக்கி மீண்ட மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு வசதியாக அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, இரு பாய்கள் மற்றும் தலையணைகள், 25 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கொண்ட தொகுப்பை பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.