ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கக்கோரி வரும் 28-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டிசம்பர் 28-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கடந்த 18-ம் தேதி செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன் பிறகே கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
‘‘இந்த ஆண்டு எவ்வித இடையூறும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற பிரதமரை சந்தித்து தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்’’ என மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனுக்கு கடந்த 23-ம் தேதி கடிதம் எழுதினேன்.
ஆலோசனைக் கூட்டம்
அதற்கு அன்றிரவே அவர் அனுப்பிய பதில் கடிதத்தில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ஒரு மாதமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படை யில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவை அனைத் துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் இதனை நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, வரும் 28-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தள்ளிவைக்கலாம் என்று கருதுகிறேன். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பதற்காக என்னைச் சந்தித்த குழுவினரும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.