கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த துரைமுருகன் உடல் நலம் தேறியதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்கிறார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து இரண்டாவது பரவல் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதில் ஏழை, பணக்காரன், அரசு அலுவலர், அரசியல்வாதி, தொண்டர், தலைவர் என அனைவரையும் பாதித்தது. தேர்தல் பிரச்சாரம் நடக்கும்போதே திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியின் வேட்பாளர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதில் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல வேட்பாளர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் குணமடைந்த நிலையில் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சில நாட்கள் தனிமையில் இருந்த பின்னர் வழக்கமான கட்சிப் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.