சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் குளியலறையில் தவறி விழுந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மல்லூர் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மோகன் பாபு (61). இவருக்குத் திருமணமாகவில்லை. தம்பி சரவணனுடன் வசித்து வந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மோகன் பாபு போட்டியிட்டார்.
இவருக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிட்ட மோகன் பாபு தனது வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோகன் பாபு வீட்டில் இருந்த குளியலறையில் தவறி, கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மோகன் பாபுவை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (14-ம் தேதி) மோகன் பாபு உயிரிழந்தார். இதுகுறித்து மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.