தமிழகம்

கடை திறப்பு விழாவுக்குச் சென்ற 'குக் வித் கோமாளி' நடிகர்: கூட்டம் கூடியதால் கடைக்கு சீல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக 'குக் வித் கோமாளி' நடிகர் புகழ் சென்ற நிலையில், அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வரும் 'குக் வித் கோமாளி' என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகர் புகழ். திருநெல்வேலி அருகே வண்ணார்பேட்டையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பிரபல திருநெல்வேலி செல்போன் கடையின் புதிய கிளையைத் திறந்து வைக்க புகழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடையைத் திறந்துவைக்க இன்று (ஏப்.14) வண்ணார்பேட்டை சென்ற நடிகர் புகழ், கடையைத் திறந்து வைத்தார். தொலைக்காட்சி பிரபலம் என்பதால் அவரைப் பார்க்க வண்ணார்பேட்டை பகுதியில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். அதேபோல அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் முயன்றனர். அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

நடிகர் புகழ்

திருநெல்வேலி உட்படத் தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டம் கூட்டியதாகக் கூறி, கடையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

புதிய கிளையின் திறப்பு விழா அன்றே கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், கடையின் உரிமையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

SCROLL FOR NEXT