அம்பேத்கர் சிலையில் விளக்கு எரிவதில்லை, சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று கூறி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே மறியல் போராட்டம் நடந்தது.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் இன்று மாலை அணிவித்தனர். அப்போது திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாரத் ரத்னா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில் நிர்வாகிகளும், அப்பகுதி மக்களும் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, "அம்பேத்கர் சிலையைச் சரியாகப் பராமரிக்கவில்லை, விளக்கு எரிவதில்லை" என்று குறிப்பிட்டு சட்டப்பேரவை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதால் ஆளுநர் அல்லது செய்தித்துறை இயக்குநர் நேரில் வரவேண்டும் என்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் மக்கள் சமூக சேவை இயக்கத்தினர் குறிப்பிட்டனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் கந்தசாமியிடம் அவர்கள் முறையிட்டனர். மக்கள் சமூக சேவை இயக்கத்தினரைச் சமாதானப்படுத்திய அவர், "மாலை அணிவிக்க வருவோருக்கு வழிவிடுங்கள். மறியலைக் கைவிடுங்கள்" என்று தெரிவித்தார். எனினும் மறியல் தொடர்ந்தது.
இறுதியில் போலீஸார் அவர்களிடம் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர். அதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாகப் போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், "சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. சிலைக்குப் பொருத்தப்பட்ட விளக்கு கூட எரியாத வகையில் உள்ளது. சிலையைப் பராமரிக்கத் தனித் துறையினர் இருந்தாலும், பராமரிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆளுநர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "அம்பேத்கர் சிலைக்குப் பொருத்தப்பட்ட விளக்கு எரிவதில்லை. இதனால் நேற்று இரவும் போராட்டம் நடந்தது. அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.