தமிழகம்

10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுப் பாதுகாப்பாக உள்ளனர்; தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுங்கள்: ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

''தடுப்பூசி போட்டதால் 10 லட்சம் பேர் பாதுகாப்பாக நலமுடன் உள்ளனர். அதை உணர்ந்ந்து மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எதையும் சமாளிக்கும் தயார் நிலையில் சென்னை மாநகராட்சி உள்ளது. பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்னையில் தடுப்பூசி போடும் முகாமைப் பார்வையிட்டபின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“இஸ்ரேல், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நம்பிக்கை தரும் முடிவுகள் வந்துள்ளன. ஜீரோ தொற்று என்கிற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். காரணம் 100% தடுப்பூசி போட்டுள்ளார்கள். அதனால் நல்ல ரிசல்ட் வந்துள்ளது. 10 லட்சம் என்கிற எண்ணிக்கை 8.5 லட்சம் முதல் டோஸ், 1.5 லட்சம் இரண்டாவது டோஸ். அதை இணைத்துதான் நாம் சொல்கிறோம்.

தடுப்பூசி 10 லட்சத்துக்கு மேல் உள்ளது. அது தவிர வாராவாரம் வருகிறது. 80% கோவிஷீல்டு, 20% கோவாக்சின் போடப்பட்டுள்ளது. ஏனென்றால் சப்ளையே அந்த 10 லட்சம் என்கிற எண்ணிக்கையில் 10,09,715 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு 7,57,516 கோவாக்சின் 2,52,199 போடப்பட்டுள்ளது. முதல் டோஸ், இரண்டாவது டோஸ் அனைத்தும் சேர்த்துச் சொல்கிறோம்.

முதல் டோஸ் போடப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஸ்டாக் தயாராக உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டும் ஒரே வகையான மருத்துவ குணமுடையவைதான். அதனால் எது சிறந்தது என்ற தேர்வு தேவையில்லாத ஒன்று. 10 பேர் போடும் இடத்தில் 100 பேர் போட்டிருந்தால் சமுதாய நலன் அதிகரிக்கும். தடுப்பூசியில் இது, அது என தனி குணம் இல்லை. இடது கை, வலது கை மாதிரிதான். ஆகவே, தடுப்பூசி போடப்போகும்போது இதைத்தான் போட வேண்டும், அதைத்தான் போட வேண்டும் என்பது இல்லை.

தடுப்பூசியைப் பொறுத்தவரை தமிழகத்தில் மிகச் சிறந்த அமைப்பு முறை உள்ளது. முன்களப் பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்ட அனைவருக்கும் போட்டுவிட்டோம். 14,000 தொற்றில் முன்களப் பணியாளர்கள் 230 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகக் குறைவான சதவீதமே.

இவர்கள் மற்ற சாதாரணப் பொதுமக்களைவிட ஆயிரம், இரண்டாயிரம் பேரை தினமும் சந்திக்கின்றனர். இருந்தும் அவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கக் காரணம் தடுப்பூசி போடப்பட்டதால்தான். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட 230 என்கிற எண்ணிக்கை கூட இன்னும் நாள் போகப்போக குறைந்துவிடும்.

கடந்த ஆண்டு உச்சபட்ச எண்ணிக்கை தினமும் 6,000 என்று இருந்தது. அது இரண்டு மடங்கு ஆனாலும் சமாளிக்க நாம் தயாராக உள்ளோம். தற்போது தொற்று எண்ணிக்கையைக் குறைப்பது முக்கியம். பரவலைத் தடுக்க மிகுந்த முயற்சி எடுத்து காவல்துறை, சுகாதாரத் துறை, அனைத்துத் துறைகளும் இணைந்து பொதுமக்களை முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுப்பது, தேவையற்ற கூட்டம் சேர்வது உள்ளிட்ட அனைத்தையும் தடுக்கும் முயற்சிகளும் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, படுக்கைகளை வைத்துக்கொண்டு காத்திருப்பது மட்டுமே தடுப்பு நடவடிக்கை அல்ல. மறுபுறம் சட்ட ரீதியான நடவடிக்கை, முகக்கவசம் அணிவதை அதிகரிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் கூடுவது, தேவையற்று வெளியில் சுற்றுவது, 100% முகக்கவசம் எனக் கொண்டுவந்தாலே தொற்றைத் தடுக்கலாம். தற்போது கோயில், சர்ச், மசூதிகளுக்கு மொத்தமாகக் கூடுவது போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலிருந்தே மனதளவில் வணங்கலாம்.

இதை நாம் சரியாகக் கையாண்டு முடிவுக்குக் கொண்டுவரலாம். இதற்கு ஊடகங்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து முயல வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் 10 லட்சம் பேருக்குப் போட்டுள்ளோம். 10 லட்சம் பேர் 10 லட்சம் குடும்பம் அல்லவா? அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியச் செய்தி அல்லவா? ஆகவே தடுப்பூசி போடாத மற்றவர்கள் எந்த விதமான குழப்பம், தேவையற்ற எண்ணங்கள், ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் உடனடியாகச் சென்று போட்டுக் கொள்ளலாம்”.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT