வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சரிடம் அளிப்போம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 147 சங்கங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வணிகர்களின் பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.250 கோடியே 27 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களிடம் குறைகேட்பு கூட்டம் சாலிகிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வணிகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்தனர்.
இதில் பங்கேற்ற மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய வெள்ளச் சேத கணக்கெடுப்பு விவரங்கள் மற்றும் கோரிக்கை மனுவினை அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, பொதுச்செயலர் மோகன், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.
கோரிக்கை மனுவில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் எளிய முறையில் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்க வேண்டும். அதை 6 மாதங்களுக்கு பிறகு செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே வங்கிகளில் கடன் பெற்று, வெள்ள பாதிப்புக்கு உள்ளான வணிகர்களுக்கு, அதே வங்கியில் மறு கடன் வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதியில் வணிகம் புத்துயிர் பெற சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசின் முப்படைகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி ஆயிரக்கணக்கானோரை மீட்டனர். நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் கொண்டு வரும் லாரிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தமிழகத்தில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பணமில்லை எனக்கூறி செல்போன் இணைப்பை 15 நாட்களுக்கு துண்டிக்க கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. பிரதமர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு முடிந்த உதவிகளை செய்து வருகிறது. வணிகர்களின் சேத விவரங்கள் மற்றும் கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. அவை மத்திய நிதி அமைச்சரிடம் வழங்கப்படும். அத்துறை வழிகாட்டுதலின் பேரில், உரிய உதவிகள் செய்யப்படும் என்றார்.