தமிழகம்

சென்னையில் 42% தடுப்பூசி போட்டுவிட்டோம்; மீதமுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர் முன்வந்து போடவும்: ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னையில் 45 வயதுக்கு மேல் 22 லட்சம் பேர் உள்ள நிலையில், அதில் 42% பேர் தடுப்பூசி போட்டுவிட்டனர். மீதமுள்ளவர்கள் உடனடியாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 10 லட்சம் பேரும் நலமாக உள்ள நிலையில், தயக்கம் வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தி.நகரில் தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டபின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:

“சுகாதாரத்துறையின் பக்கம் உயிர் காக்கும் மருந்துகள் தாராளமாக உள்ளன. தடுப்பூசியைப் பொறுத்தவரை நேற்றைய தினம் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் ஒரு மில்லியன் என்கிற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளோம். நேற்று வரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம்.

சென்னையில் 80 லட்சம் பேர் உள்ளனர். அதில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 22 லட்சம் பேர். அதில் 9 லட்சம் பேருக்குப் போட்டுவிட்டோம். அதாவது 42% எட்டிவிட்டோம். அதனால் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. தடுப்பூசிகள் நிறைய எண்ணிக்கையில் உள்ளன. 10 லிருந்து 15 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆகவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாராளமாக எங்களது 450 தடுப்பூசி மையங்களில் தானாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

அதுவல்லாமல் குடியிருப்பில் மொத்தமாக 100, 150 பேர் 45 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளார்கள் என்றால் எங்களது மருத்துவக் குழுவினர் நேரடியாக வந்து ஊசி போடத் தயாராக உள்ளனர். அதுபோன்று ஆயிரக்கணக்கான இடங்களில் போட்டு வருகிறோம். அதை எங்கள் மருத்துவர்கள், அதிகாரிகள் முன்னின்று நடத்தி வருகின்றனர். வேகமாக முன்வந்தால் மீதமுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 10, 12 லட்சம் பேரையும் அடுத்துவரும் ஒரு வாரத்தில் போட்டு முடித்துவிடலாம்.

அதன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியைத் தாமாக வந்து போட்டுவிடுவார்கள். ஆகவே, 45 வயதைக் கடந்தவர்கள் தாராளமாக எவ்விதத் தயக்கமும் இல்லாமல், பயமும் இல்லாமல் ஒரு தேசியக் கடமையாக இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் 10 லட்சம் பேருக்கு நாம் போட்டுள்ளோம். எங்கேயும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில் இணை நோயுள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொண்டோர், இதய நோய், மற்ற நோய் உள்ளவர்கள் இருந்திருப்பார்கள்.

வரும் அனைவரையும் எங்கள் மருத்துவர்கள் பரிசோதித்து தாராளமாகப் போடலாம் என்றால் போடுகிறோம். 10 லட்சம் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல, அதை முடித்துள்ளோம். ஆகவே, மீதமுள்ளவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து நாங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டியல் போட்டுள்ளோம். அது இல்லாமல் அரசு பொது மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. இதுவே 250க்கு மேல் உள்ளன.

இது தவிர தனியார் மருத்துவமனைகள் 150க்கு மேல் உள்ளன. அங்கும் போட்டுக்கொள்ளலாம். அங்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தாராளமாக அங்கும் போடலாம். இந்த அளவுக்கு அதிகமாக மாநகராட்சியில் உள்ளது பெரிய விஷயம். ஆகவே, இதைப் பயன்படுத்தி சென்னை மக்கள் உடனடியாகத் தடுப்பூசி போடுவதை முடித்தால் 10 லட்சம் என்பதை 20 லட்சம் என்று மாற்றிவிட்டால் அதன் பின்னர் தொற்று குறைய ஆரம்பித்துவிடும்.

எல்லோரும் எதிர்ப்பு சக்தி இருக்கும் நிலைக்கு மாறிவிட்டால் தொற்று எண்ணிக்கை குறைந்துவிடும். ஆகவே, பொதுமக்களுக்கு 45 வயது ஆகியிருந்தால் ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும். தடுப்பூசி போட்டுவிடலாம்”.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT