காரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில், காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஏப்.06-ம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்துக்கு உள்ளூர் போலீஸார், மத்திய பாதுகாப்புப் படையினருடன் கூடிய 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புப் பணி குறித்து காரைக்கால் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன், வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம் ஆகியோர், இன்று (ஏப். 14) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றிலும் உள்ள பாதுகாப்பு நிலவரங்களையும், அங்கு வந்து செல்லக்கூடிய நபர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டையும் ஆய்வு செய்தனர்.