விவசாயப் பணிகளைத் தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகுபடி பணிகளைத் தொடங்குவார்கள். அதேபோல், ஆண்டு தொடக்கத்தின்போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர்தான், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியைத் தொடங்குவது டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒரு வழக்கமாகும். இந்த வழக்கமான நிகழ்வை 'நல்லேர் பூட்டும்' விழாவாக இன்றளவும் டெல்டா மாவட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறுவை, சம்பா சாகுபடிகள் முடிந்ததும் கோடை காலத்தில் வயல்களில் எந்த சாகுபடி பணியையும் மேற்கொள்ளாமல் வயலை அப்படியே ஓரிரு மாதங்களுக்கு விட்டுவிடுவார்கள். பின்னர், தமிழர்களின் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் பிறந்ததும், நல்ல நாள் பார்த்து அந்த வயலில், நல்லேர் பூட்டி பணியைத் தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் அந்த ஆண்டு சாகுபடியில் எவ்வித இடையூறும் இல்லாமல், மகசூல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நல்லேர் பூட்டும் முன்பாக, கிராமங்களில், கிராம மக்கள் அடங்கிய பொதுக்கூட்டம் சித்திரை முதல் நாளில் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் சித்திரை மாதம் பிறந்ததும், இந்த ஆண்டு எவ்வளவு மழை கிடைக்கும், எந்த வகையான தானியங்களை சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பது குறித்து பஞ்சாங்கத்தினை ஊர்ப் பெரியவர்கள் வாசிப்பது வழக்கம். பஞ்சாங்கம் வாசித்ததும், நல்லேர் பூட்டும் தேதி, நேரத்தையும் குறித்து, அது தொடர்பாக தண்டோரா மூலம் கிராமங்களில் அறிவிக்கப்படும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன் பின்னர், மாடுகளைக் குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயல், தோட்டத்தில் சிறிய அளவில், வீடுகளில் சேகரமான குப்பைகள் அடங்கிய இயற்கை உரம், நவதானிய விதைகளைத் தூவி, இனிப்புடன் கூடிய பச்சரிசியைக் கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றைப் படையலிட்டு உழவு மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
நல்லேர் பூட்டியதும் ஏர் கலப்பைகளை ஊரில் பொதுவாக எல்லோரும் வழிபடும் கோயிலுக்குக் கொண்டு வந்து, அங்கு வழிபட்டுச் செல்வார்கள்.
அதன்படி, தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமான இன்று (ஏப்.14) தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டி, வேங்கராயன் குடிகாடு, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
தற்போது நவீன விவசாயத்தின் ஒரு பகுதியாக உழவு மாடுகளும், ஏர் கலப்பையும் மறைந்து வந்தாலும், டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகள் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.