தமிழகம்

தமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா: தினமும் 2 லட்சம் பேர் இலக்கு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏற்கெனவே முடிவெடுத்தபடி தடுப்பூசி போடும் இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. சென்னை மாநகராட்சியும் முனைப்புடன் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 10 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலை மும்மடங்கு வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோய்த் தொற்றுள்ளவர்களைக் கண்டறிதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல், தீவிர தடுப்பூசி முகாம் போன்ற 3 நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பணிகளை முடுக்கிவிட ஏற்கெனவே பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 15 களப்பணிக் குழுக்களும், கண்காணிப்பு அலுவலர்களும் அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரு காலவரையறைக்குள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக 14 ஏப்ரல் முதல் 16 ஏப்ரல் வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள தொற்று எண்ணிக்கையில் 35% தொற்று உள்ள சென்னையிலும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநகராட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி 1,25,000 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும். ஆனால், தற்போது 1,25,000 பேர் மட்டுமே போட்டுக் கொள்கின்றனர். இதை தினமும் 2 லட்சமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தடுப்பூசி போடப்பட்டபோது 600 மையங்களில் தொடங்கப்பட்ட பணி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 4,328 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

அதிக நபர்களுடன் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் முயன்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

''சென்னையில் உள்ள 80 லட்சம் பேரில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 22 லட்சம் பேர் உள்ளனர். இதில் சுமார் 42% வரை எட்டிவிட்டோம். 10லிருந்து 15 லட்சம் வரை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஆகவே, விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிடுவோம்'' என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT