தமிழகம்

உதகை கர்நாடகா அரசு பூங்காவில் ‘இசை நீரூற்று’ - சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் திறப்பு

செய்திப்பிரிவு

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், உதகையிலுள்ள கர்நாடகா அரசு பூங்காவில் இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின்  தோட்டக்கலை பூங்கா உள்ளது. இது, இயற்கை அழகுடன் ரம்மியமாக காணப்படுகிறது.

மேலும், அலங்கார செடிகளுடனும், புல்வெளி தோட்டத்துடனும் டாப்பியரி கார்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் கொட்டுவதுபோல அருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக கண்ணாடி மாளிகை மற்றும்நர்சரியில் பூந்தொட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

கோடை சீசனையொட்டி, பூங்காவின் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

பால்சம், பிகோனியா, சைக்ளோமன்,ரெனன்குலஸ், டேலியா, கேலண்டூலா, சால்வியா, ஜெரேனியம், கேக்டஸ் உட்பட 50 ரகங்களைச் சேர்ந்த மலர்ச் செடிகள்நடவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், நர்சரியில் 40 ஆயிரம்பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர்கர்நாடகா அரசு பூங்காவுக்கு 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர 300 அடி தூரம் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தற்போது, இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் இயற்கையாக உற்பத்தியாகும் ஊற்று தண்ணீர், 4 குட்டைகளில் சேகரமாகும் வகையில் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு குட்டையில் குழாய்கள், விளக்குகள் பொருத்தி 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின்னர் மோட்டார் பொருத்தி இயக்கினால், இரவில் வண்ண விளக்குகளுடன் இசைக்கு ஏற்ப ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு தண்ணீர் சென்று நடனம் ஆடுவது போன்று காட்சி தரும்.

தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக, நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்காக காட்சி மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்காக விரைவில் தொங்கு பாலம் மற்றும் இசை நீரூற்று திறக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க குட்டைகளில் வண்ண மீன்கள், வாத்துகள் விடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT