தமிழகம்

நுனி கருகல் நோய் தாக்கம், இடுபொருட்களின் விலை உயர்வு: சின்ன வெங்காயம் சாகுபடி செய்த உடுமலை விவசாயிகள் கவலை

எம்.நாகராஜன்

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் உள்ளூரில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தின் கொள்முதல் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி ஆண்டாள் ராமநாதன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: 110 நாட்களில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு வரும். விதை, நாற்று நடவு, களை, உரம், பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய நேரிடுகிறது. சாதகமான தட்பவெப்ப நிலை, தரமான விதை ஆகியவற்றை பொறுத்து ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கும். கடந்த சில வாரங்களாகவே வெயில்வாட்டி வதைப்பதால், நுனி கருகல் நோய் ஏற்பட்டு சின்ன வெங்காய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏக்கருக்கு 6 டன் முதல் 7 டன் வரை மட்டுமே விளைச்சல்கிடைத்துள்ளது.கடந்த சில மாதங்களாக கிலோ ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்னவெங்காயம், தற்போது ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் முதல் தரமான வெங்காயத்துக்குத்தான் இந்த விலை. இதற்கிடையேஉரத்தின் விலை மூட்டைக்கு ரூ.600வரை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல பூச்சி மருந்து, களைக்கொல்லி என வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. விலை வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கவும் வாய்ப்பில்லை. எனவே வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விதை, மருந்து, உரம் ஆகியவற்றை மானியமாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதாவது:

பருவமழையால் நடப்பு ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்த நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் நெல், கரும்பு, காய்கறிப் பயிர்களை அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டிஏபி உரத்தின் விலைமூட்டைக்கு ரூ.700 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை ரூ.1,200-க்கு விற்பனையான டிஏபி உர மூட்டை, தற்போது ரூ.1900-க்கு விற்பனையாகிறது. ரூ.1,160-க்கு விற்கப்பட்ட காம்ப்ளஸ் உரம் மூட்டை, தற்போது ரூ.1,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், இங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT