தமிழகம்

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களை தக்கவைக்க முயற்சி: கரோனா பாதுகாப்பை அதிகரிக்கும் கட்டுமான நிறுவனங்கள்

செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை பரவல் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ள கட்டுமானத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில், ஓட்டல் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் பலரும் நடந்தே சென்றனர். இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளான வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊரிலேயே வேலை செய்து வருவாய் ஈட்டினர். இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கரோனாதொற்று குறைந்த நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டுமானத் தொழிலுக்காக ஒப்பந்ததாரர் மூலம் வடமாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், கரோனா 2-வது அலை வேகமாகப் பரவுவதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கு அச்சம் காரணமாக தங்களது வேலைக்கான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் சொந்த ஊருக்கு திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் கூறியதாவது:

கடந்த முறை போல தற்போது திடீரென முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை. நாங்களும் அதுதொடர்பான விவரங்களை அவர்களுக்குத் தெரிவிப்பதுடன், கரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

கட்டுமானப் பணியில் ஈடுபடும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் ரூ.100 அபராதம் விதிக்கிறோம். அதனால் அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் குடும்பத்தினருடன் வராமல் தனி ஆளாகத்தான் வந்துள்ளனர். வேலை நடைபெறும் இடங்களிலேயே தங்கியிருக்கும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மேலும், சொந்த ஊருக்குச் சென்றாலும் அங்கும் கரோனா பாதிப்பு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இதையெல்லாம் புரிந்து கொண்டு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டால் கட்டுமானப் பணிகள் வெகுவாக பாதிக்கும் என்பதால் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டுமான நிறுவனங்கள் படாதபாடு படுகின்றன என்பதே நிதர்சனம்.

SCROLL FOR NEXT