காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பு அறையில் மழைநீர் உள்ளே புகுந்தது.
நடந்து முடிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட வாக்கு எண்ணும் மையமாக பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பொறியில் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை கண்காணிப்பதற்காக வேட்பாளர்களின் பிரிதிநிதிகளின் கண்காணிப்பு அறை உள்ளது. இந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் வழியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வீடியோவை பார்க்க முடியும். இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக இந்த கண்காணிப்பு அறைக்குள் தண்ணீர் புகுந்தது.
இதுகுறித்து ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கூறும்போது, "காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் பிதிநிதிகளின் கண்காணிப்பு அறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.