சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த பெரியார் ஈ.வெ.ரா. பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டினார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் 'கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு' என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் அதிமுக காபந்து அரசுக்கு இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி அரசு சொல்வதை கேட்கும் அரசாக இருக்கிறதா? எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். தாமதம் செய்தால் மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1979-ல் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு 'பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை' என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக அரசு, பெயர் மாற்றம் செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக புதிய பெயரை நீக்கி `பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: எம்ஜிஆர் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் அதிமுக அரசு, அவர் சூட்டிய பெரியார் பெயரை நீக்கியுள்ளது. ஏற்கெனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கியதை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக பெயர் மாற்றத்தை நீக்கி, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரை தொடரச் செய்ய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெரியார் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்களின் உணர்வோடு விளையாடும் இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக பெரியார் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.