தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளை, அனைத்து வங்கிக் கிளைகளும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன ஆனால், வங்கிக் கிளைகளில் அவற்றை பின்பற்ற போதிய வசதிகள் இல்லை. இதனால், வங்கி ஊழியர்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர்.
எனவே, வங்கி ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, வங்கி வேலை நேரத்தை மீண்டும் குறைக்க வேண்டும். இதன்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வங்கிக் கிளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மேலும், 50 சதவீத வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தால், அவற்றில் ஏதாவது ஒரு கிளை செயல்பட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.