மதகடிப்பட்டு வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் முகக்கவசம் இன்றி இருந்தனர். 
தமிழகம்

சமூக இடைவெளியும் இல்லை - முகக்கவசமும் அணியவில்லை: மதகடிப்பட்டு வாரச்சந்தையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் புகழ்பெற்ற வாரச்சந்தை யில் கரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை. கொம்யூன் அதிகாரிகளும் கரோனா விழிப்புணர்விலோ, கண்காணிப்பிலோ ஈடுபடவில்லை.

புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிக பிரபலமானது. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில்இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பழங்கால முறைப்படி கையில் துண்டு போட்டு பேரம் பேசி விற்கப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு சந்தை என்ற பெருமையை பெற்ற இச்சந்தையில் வாரந்தோறும் 1,500 மாடுகள் வரை விற்பனையாகும். அத்துடன் மாட்டுக்கு தேவையான பொருட்களான கயிறு, சங்கை, சாட்டை போன்றவையும் கோழி, கருவாடு மற்றும் காய்கறிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். இங்கு தமிழகம் - புதுச்சேரி வியாபாரிகள் வாரந்தோறும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்கின்றனர்.

தமிழ்புத்தாண்டையொட்டி இச்சந்தையில் நேற்று அதிகளவு மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் சமூக இடைவெளி முற்றிலும் கடைபிடிக்கப்படவில்லை. பலரும் முகக்கவசம் அணியவில்லை.

இதுபற்றி அங்கிருந்தோரிடம் கேட்டதற்கு, “கிராமப் பகுதிகளில் பலரும் முகக்கவசம் அணிவதில்லை. கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சந்தை தொடக்கம் முதல் இறுதி வரை இங்கு முகாமிட்டு கண்காணித்திருக்கலாம். இந்த சந்தையில் கிராம மக்களுக்கு கரோனா பரிசோதனை ஏற்பாடு செய்திருக்கலாம். முகக்கவசம், தடுப்பூசி பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதுபோல்நடக்கவில்லை” என்று குறிப்பிட்டனர். மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து கரோனா கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையும் தெரிவித்திருந்தார். ஆனால் புதுச்சேரி வாரச்சந்தை உட்பட பல பகுதிகளில் யாரும் கண்காணிப்பில் ஈடுபடவில்லை.

மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து கரோனா கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையும் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT