கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடியில் ஏப்.17-ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

வாக்கு இயந்திரங்கள் இருசக்கரவாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், சென்னை வேளச்சேரியில் உள்ள குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது.

இதில், 3 அலுவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வாக்கு இயந்திரங்கள் இருசக்கரவாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்திருந்தார்.

மேலும், வேளச்சேரியில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை, 2 பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றை வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். அதில், விவிபேட் இயந்திரம் முதலில் 50நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு, 15 வாக்குகள் பதிவான நிலையில் பழுதானதாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வெளியில்எடுத்துச் செல்லக் கூடாது. வாகனத்தில் எடுத்துச் செல்வது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழுமையாக எதிரானதாகும். பழுதானஇயந்திரங்கள் வேறு மையத்துக்கும், வாக்குப்பதிவு செய்யப்பட்டஇயந்திரங்கள் வாக்கு எண்ணும்மையத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இருப்பினும் இவற்றை மண்டல குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது தவறு என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி எண் 92ல் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 17ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 200-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT