ஆம்பூர் புறவழிச்சாலையில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர், எலுமிச்சை சாறு வழங்கிய ஆய்வாளர் லட்சுமணன். 
தமிழகம்

கோடை வெயிலில் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர், தர்பூசணி வழங்க நடவடிக்கை: எஸ்.பி. உத்தரவால் காவலர்கள் மகிழ்ச்சி

ந. சரவணன்

கோடை வெயிலைச் சமாளிக்க ஆம்பூரில் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை சாறு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினாலும், பொதுமக்கள் நலனுக்காகப் பணியாற்றி வரும் காவலர்களின் நிலைமையோ பரிதாபமாக உள்ளது.

குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே சாலைகளில் நின்று போக்குவரத்தைச் சரி செய்து வருகின்றனர். காலை நேரங்களில் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்கள் நேரம் செல்லச்செல்ல வெயிலைச் சமாளிக்க முடியாமல் சோர்வடைகின்றனர். அதிலும் பெண் காவலர்கள், வயது முதிர்ந்த காவலர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள் படாதபாடுபடுகின்றனர்.

எனவே, கோடை வெயிலைச் சமாளிக்கவும், போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்களின் உடல் சூட்டைத் தணிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், பணியில் உள்ள காவலர்களுக்கு தினசரி 3 நேரங்களில் மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக ஆம்பூர் உட்கோட்டத்தில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை சாறு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆம்பூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் லட்சுமணன் தலைமை வகித்து, ஆம்பூர் புறவழிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை சாறுகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள், சுங்கச்சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கும் மோர் மற்றும் உடலுக்குக் குளர்ச்சி தரும் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் மோர் வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, கிருபாகரன், ஜெகதீஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT