ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரக தக்கட்டி காப்புக்காடு தொட்டல்லா ஆற்றின் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு வேட்டை தடுப்புக் குழுவினர். 
தமிழகம்

ஓசூர் காப்புக்காடுகளில் பண்டிகை கால சிறப்பு வேட்டை தடுப்புக் குழு அமைப்பு: வனத்துறை தீவிர கண்காணிப்பு

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரக காப்புக்காடுகளில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைக் காலத்தில் அரிய வகை வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் பண்டிகை கால சிறப்பு வேட்டை தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் யானை, சிறுத்தை புலி, கரடி, புள்ளிமான், காட்டெருமை, மயில், காட்டுப்பன்றி, கரடி, மலைப்பாம்பு, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகளை, காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தினர் மற்றும் வெளியாட்கள் பண்டிகை கால விடுமுறையைப் பயன்படுத்தி வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் பண்டிகை காலங்களில் சிறப்பு வேட்டை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய விடுமுறையை முன்னிட்டு மாவட்ட வனத்துறை சார்பில் சிறப்பு வேட்டை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுக்கள் மூலம் காப்புக் காடுகளை ஒட்டிச் செல்லும் சாலைகளில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறும்போது, ''மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் விடுமுறை நாட்களில் வன விலங்கு வேட்டை உள்ளிட்ட வனக்குற்றங்கள் ஏற்படாத வகையில் உரிகம் வனச்சரகத்தில் 4 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வனச்சரகர் தலைமையில் ஒரு குழுவும் வனவர், வனக்காப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களில் தலா 10 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த சிறப்புக் குழுவினர் உரிகம், தக்கட்டி, கெஸ்த்தூர், மல்லள்ளி, பிலிக்கல், மஞ்சுகொண்டப்பள்ளி ஆகிய 6 காப்புக்காடுகளில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தமிழக வனப்பகுதிகளில் வெளியாட்கள் நுழையாத வகையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிகம் வனச்சரகத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள தப்பகுளி, பசவேஸ்வரர் கோயில் பகுதி, உக்னியம், ராசிமணல், அஜ்ஜிப்பாறை வரை உள்ள தமிழக வனப்பகுதிகளில் வெளியாட்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT